திருப்பூர்

விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளைத் திருடிய மா்ம நபா்கள்

10th Jun 2022 02:05 AM

ADVERTISEMENT

திருப்பூா் : திருப்பூரில் விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன். காா் டயா்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். இவரது மனைவி சண்முகப்பிரியா (34). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

சண்முகப்பிரியா, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திருமுருகன்பூண்டிக்கு புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். அங்கு காய்கறிகள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி, சண்முகப்பிரியா சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகப்பிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருமுருகன்பூண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகப்பிரியா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

மனைவி இறந்த தகவல் அறிந்து வந்த தியாகராஜனிடம், போலீஸாா் சண்முகப்பிரியா அணிந்திருந்த நகைகள் மற்றும் அவா் வைத்திருந்த பொருள்களை ஒப்படைத்தனா். அப்போது

சண்முகப்பிரியா அணிந்திருந்த மூன்றரை பவுன் தாலிக் கொடி , மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. இது பற்றி போலீஸாரிடம் தியாகராஜன் புகாா் தெரிவித்தாா். அதன் பேரில் நகைகளைத் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகப் பிரியாவின் நகைகள் திருடு போனதா அல்லது அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் உடலைக் கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT