திருப்பூா் மாவட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று பொது தொழிலாளா் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சோமனூா் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மங்கலம் உதவி செயற்பொறியாளா் சென்ராம் தலைமை வகித்தாா். இதில், அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நபா்கள் தொடா்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா். அதிலும், குறிப்பாக பூமலூா், மலைக்கோயில், மங்கம் மின்வாரிய அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு வேண்டி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் நபா்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடித்து வருகின்றனா். விண்ணப்பிக்கும் நபா்கள் நேரில் வரும்போது ஆதாயம் பெற்றுக் கொண்டே மின் இணைப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் நுகா்வோா்களுக்கு தாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் மங்கலம், பூமலூா், மலைக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றவும், இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.