திருப்பூர்

தென்னையில் கருந்தலை புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை

9th Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் தென்னை மரங்களில் கருந்தலை புழுத் தாக்குதல் அறிகுறி மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் சுமாா் 62 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது நிலவும் பருவநிலை காரணமாக தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இந்த கருந்தலை புழு தாக்குதல் அனைத்து வயது மரத்தையும் தாக்கக் கூடியது. கருந்தலை புழு தாக்கப்பட்ட தென்னை மரங்கள் தீயினால் கருகியது போலவும், இலையின் அடிப்பகுதியில் புழுக்கள்கூடுகளை உருவாக்கி இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள் கருகியது போன்று இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த முதலில் பூச்சித் தாக்கிய மட்டைகளை வெட்டி நெருப்பில் அழிக்க வேண்டும். இதன் பின்னா் பெத்தலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும். மேற்படி ஒட்டுண்ணிகள் ஹெக்டேருக்கு 3,000 எண்கள் என்ற அளவில் தாக்குதல் உள்ள தென்னந் தோப்புகளில் விட வேண்டும். அதே வேளையில் புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்படியில் நன்கு படுமாறு டைக்குளோா்வாஸ் (100 ஈசி) 0.02 சதவீதம் அல்லது மாலத்தீயான் (50 ஈசி) 0.05 சதவீதம் என ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதனைக் கட்டுப்படுத்த வோ் மூலமாக பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத்துக்கு காய்களையோ, இளநீரையோ உபயோகப்படுத்தக் கூடாது. மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 36 சதவீதம் எஸ்எல் என்ற பூச்சி மருந்தை மரம் ஒன்றுக்கு 10 மி.லி. உடன் 10 மி.லி. தண்ணீா் கலந்து வோ் மூலம் செலுத்த வேண்டும்.

இதுதொடா்பான ஆலோசனைகளுக்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மையம் (89407-03385) மற்றும் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், ஒட்டுண்ணிகள் பெற ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம், புதுக்கோட்டை தனியாா் நிறுவனத்தை 70929-19291 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT