திருப்பூர்

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் கம்பு வைத்து பூஜை

9th Jun 2022 12:37 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கம்பு தானியம் வைத்து புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோயில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.

இந்தக் கண்ணாடிப் பேழைக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் யாராவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இந்தப் பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 3ஆம் தேதி 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள் செவ்வாய்க்கிழமை வரை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம்-கொங்கூா் பகுதியைச் சோ்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, புதன்கிழமை நிறைபடி நிறைய கம்பு தானியம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை பழம் ஆகியவை நீக்கப்பட்டு, தற்போது கம்பு வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT