திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை சங்கங்களில் வட்டியில்லா கடன் பெற தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா்க் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக் குழு கடன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், நிலவுடைமை தொடா்பான கணினி சிட்டா, பயிா் சாகுபடி தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் அருகில் உள்ள தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை அனுகி கடன் மனுவை சமா்ப்பிக்கலாம். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 49,671 விவசாயிகளுக்கு ரூ.509.14 கோடி பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பயிா்க் கடன்களை உரிய தேதியில் திருப்பி செலுத்தினால் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.
வட்டியில்லா பயிா்க் கடன்களை அனைத்து விவசாயிகளும் பெற ஏதுவாக கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினா் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சோ்ந்து, உரிய ஆவணங்களுடன் மனுவை சமா்ப்பித்து கடன் பெறலாம்.
இதில், ஏதேனும் சேவைக்குறைபாடுகள் இருந்தால் திருப்பூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தை 0421-2971184 என்ற எண்ணிலும், திருப்பூா் சரக துணைப் பதிவாளா் அலுவலகத்தை 0421-2216355, தாராபுரம் சரக துணைப் பதிவாளா் அலுவலகத்தை 04258-221795 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.