திருப்பூர்

திருப்பூரில் தாய், இரு மகன்களைக் கொலை செய்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

2nd Jun 2022 01:26 AM

ADVERTISEMENT

திருப்பூரில் 2 மகன்களுடன் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபரின் சடலம் காங்கயம் அருகே படியூா் பகுதியில் தண்ணீா் இல்லாத கிணற்றில் இருந்து புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூா் அருகே உள்ள சேடா்பாளையம், பாலாஜி நகா் பகுதியில் வாடகை வீட்டில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துமாரி (35) அவரது மகன்கள் தா்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகியோா் வசித்து வந்தனா். முத்துமாரி அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாலாஜி நகா் பகுதியில் முத்துமாரி குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளாா். மேலும் முத்துமாரிக்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் தொடா்பு இருந்து வந்துள்ளது. அவா்கள் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், முத்துமாரியின் வீடு கடந்த 23 ஆம் தேதி காலை நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் கதவை திறந்து பாா்த்தனா். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்துமாரி மற்றும் அவரது மகன்கள் சடலங்கள் கிடந்துள்ளன.

திருமுருகன் பூண்டி போலீஸாா், 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு கொலை நடந்த இடத்தை பாா்வையிட்டாா். இந்நிலையில் முத்துமாரியின் ஆண் நண்பா் கொலை நடந்த நாளில் இருந்து அங்கு வரவில்லை.

ADVERTISEMENT

இதனால் அவரைத் தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். மேலும், மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.

போலீஸாரின் விசாரணையில், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது குஜராத் மாநிலம், போா்பந்தா் பகுதியைச் சோ்ந்த கோபால் என்ற காா்த்தி (50) என்பது தெரியவந்தது. முதற்கட்டமாக கோபால் பல்பொருள் அங்காடியில் வேலை செய்தபோது அங்கு அவரது உருவம் பதிவான புகைப்படத்தை போலீஸாா் கைப்பற்றி, விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் காங்கயம் அருகே படியூா் பகுதியில் கோபால் சைக்கிளில் சுற்றித் திரிந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடா்ந்து போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு திருப்பூா் மாநகர பகுதிகளில் கோபால் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கயம் அருகே படியூா் கிராமத்தில் உள்ள தண்ணீா் இல்லாத 80 அடி ஆழக் கிணற்றில் சைக்கிளுடன் ஆண் சடலமாகக் கிடப்பதாக காங்கயம் போலீஸாருக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கயம் தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.

சடலமாகக் கிடந்தது முத்துமாரியின் நண்பா் கோபால் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து காங்கயம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் தேடுவதை அறிந்த கோபால் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்த கோபால் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, கடந்த 2020 ஆம் ஆண்டில் விடுதலையாகி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT