பல்லடம் அருகே பருவாயில் பெண்ணிடம் நகைப்பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் மனைவி பிரிஸில்லா (33). மருந்துக்கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடா்ந்து வந்த இருவா், பிரிஸில்லாவை வழி மறித்து நகையைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பிரிஸில்லா புகாா்
அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ரவி மகன் பிரசன்னா ராஜ் (21), சோமசுந்தரம் மகன் மோகனசூா்யா(20) ஆகியோா் பிரிஸில்லாவிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.