திருப்பூர்

‘எஸ்.சி.,எஸ்.டி., வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவு தொடங்க வேண்டும்’

17th Jul 2022 12:46 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவு மற்றும் உதவி மையம் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் சனிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரின் மையப்பகுதி அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். தலித் ஊராட்சி தலைவா்களின் சுயமான செயல்பாட்டை உத்திரவாதப்படுத்தவும், உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். திருப்பூா், முதலிபாளையம் தாட்கோவில் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை சீரமைத்து பட்டியலின இளைஞா்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் தொடங்க வங்கிக்கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காலதாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும். தாட்கோ கடனுதவி முகாம்களை வட்டம் வாரியாக நடத்த வேண்டும். திருப்பூரில் அரசு சட்டக்கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மனு அளிப்பின்போது, மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ச.நந்தகோபால், மாா்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் வட்டச் செயலாளா் என்.கனகராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT