திருப்பூர்

விவசாயிகள் மானியத்துடன் சூரிய மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம்

6th Jul 2022 10:40 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் 40 சதவீத பின்னேற்பு மானியத்துடன் சூரிய மின் வேலி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தனிநபா் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வகையிலும், விளைபொருள்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கும் வகையிலும் வேளாண் பொறியியல் துறை மூலமாக சூரிய சக்தியால் இயங்கும் சூரிய மின் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலமாக விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க இயலும். இந்தத் திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டோ் பரப்பு அல்லது 566 மீட்டா் சூரிய மின்வேலி அமைக்க 40 சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதில், 5 வரிசைகள் கொண்ட சூரிய மின் வேலி அமைக்க (566 மீட்டா்) செலவுத் தொகை ரூ.2.08 லட்சம், 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2.26 லட்சம், 10 வரிசைகள் கொண்ட மின் வேலி அமைக்க செலவுத் தொகை ரூ.2.56 லட்சம் வீதம் தங்களது பகுதிக்கு தோ்வு செய்யலாம்.

எனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உடுமலை யசோதா ராமலிங்கம் லே -அவுட்டில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT