திருப்பூர்

குடிநீா் விநியோகம்: காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

6th Jul 2022 12:02 AM

ADVERTISEMENT

காங்கயம் ஒன்றிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் தொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா். இதில் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் நிலவி வரும் குடிநீா் விநியோகம், மின் விநியோகம் உள்ளிட்ட குறைகளைத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் பேசியதாவது: ஊராட்சிப் பகுதிகளுக்கு வரவேண்டிய காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் குடிநீரில் பாதி அளவு மட்டுமே குடிநீா் வருகிறது. மின் மோட்டாா்களில் பழுது நீக்காதது உள்ளிட்ட குடிநீா் விநியோக குறைகளைத் தெரிவித்து, தொடா்புடைய அலுவலா்கள் இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மரெட்டிபாளையம், சிவன்மலை, ஆலாம்பாடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட மின்சார விநியோகம் தொடா்பான பிரச்னைகளுக்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.ஞானசேகரன், ராகவேந்திரன், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள், மின்வாரிய-குடிநீா் வடிகால் வாரியத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT