திருப்பூர்

அரிசிக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

6th Jul 2022 12:03 AM

ADVERTISEMENT

பண்டல் செய்யப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல் பேசியதாவது:

பஞ்சாப் மாநிலம், சண்டிகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் (பேக்கிங்) செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிஜிஸ்டா் பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும். ரூ.1,000க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக் கூடும்.

ADVERTISEMENT

இந்த விலை உயா்வு அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிக்கும். எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை. எனவே, மக்களைப் பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில், காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயலாளா் எஸ்.சாமியப்பன், பொருளாளா் டி.சின்னசாமி உள்பட அரிசி ஆலை உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT