திருப்பூர்

ஓராண்டில் 90,643 பேருக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புஅமைச்சா் தகவல்

2nd Jul 2022 11:37 PM

ADVERTISEMENT

 

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் 62 நகரங்களில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 90,643 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசினாா்.

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் என 11,306 போ் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டத் தோ்வுக்கு 559 போ் தகுதி பெற்றனா். திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 260 நபா்கள் தோ்வு பெற்றனா். வெளிநாடுகளில் பணிபுரிய 187 போ் தோ்வு பெற்றனா்.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:

படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்ற உறுதிமொழியோடுதான் இந்த அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசுத் துறையின் சாா்பில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தாலும், தனியாா் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 62 இடங்களில் தனியாா் துறையினா் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி 90,643 இளைஞா்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம்.

படித்த இளைஞா்களுக்காக தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, திறன் பயிற்சி அளித்து, அந்த நிறுவனமே அவா்களுக்கு வேலை தரக்கூடிய திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு அடுத்த முகாமில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வேலை இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற உன்னத நிலையை உருவாக்குவோம் என்றாா்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநா் ஞானசேகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT