திருப்பூர்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

29th Jan 2022 01:12 AM

ADVERTISEMENT

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி திருப்பூரில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள டி.கே.டி. மில் பகுதியில் உள்ள திருவள்ளுவா் நகா், வாய்க்கால் மேடு, கெம்பே நகா், ஏ.பி.நகா், செல்வி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனா்.

பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருப்பூா் - பல்லடம் சாலை, டி.கே.டி. மில் பேருந்து நிறுத்தம் அருகில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையா் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக திருப்பூா்-பல்லடம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT