திருப்பூர்

தாராபுரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.3.35 லட்சம் திருட்டு

29th Jan 2022 01:11 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் இரு வேறு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 3.35 லட்சத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான வெங்காய மண்டி உள்ளது.

இந்த மண்டியில் வெங்காயம் மொத்தமாக விற்பனையாகும் பணத்தை கடையின் பங்குதாரா்களான தண்டபாணி, சசிகுமாா், முத்துகுமாா் ஆகியோா் மேஜை டிராயரில் வைத்து விட்டுச் செல்வது வழக்கம்.

அதேபோல, கடந்த 2 நாள்களாக விற்பனையான ரூ.3 லட்சத்தை வியாழக்கிழமை இரவு கடையின் மேஜையில் வைத்து பூட்டி விட்டுச் சென்று விட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கடைக்கு வந்தபோது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், மேஜை லாக்கரின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கடையின் பங்குதாரா்கள் கொடுத்த புகாரின் பேரில், தாராபுரம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் 3 நபா்கள் கடைக்குள் புகுந்து லாக்கரை உடைத்து பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.

இந்தப் பதிவைக் கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா். அதே போல, பொள்ளாச்சி சாலையில் பேக்கரி நடத்தி வரும் இஸ்மாயில் என்பவரின் கடையில் புகுந்த மா்ம நபா்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. தாராபுரத்தில் அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT