திருப்பூர்

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

26th Jan 2022 07:31 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில் வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிா்ப்பு இயக்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் வரையில் உள்ள இணைப்புச் சாலையானது மாநில நெடுஞ்சாலையின் வசம் இருந்தது. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயா்த்தப்பட்ட சாலையின் மொத்த தூரம் 32 கிலோ மீட்டராகும்.

ஆனால், தரம் உயா்த்தும்போது தனியாா் நிலத்தை எடுக்காததுடன், ஆக்கிரமிப்புகள் கூட அகற்றப்படவில்லை. மழை நீா் செல்ல கால்வாய்களோ, நான்கு வழிச்சாலையில் நடைபாதைகளோ அமைக்கப்படவில்லை. இந்த சாலையின் மொத்த தூரத்தில் 20 கிலோ மீட்டா் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்குள் வருவதுடன், 12 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.

ADVERTISEMENT

இதில் வேலம்பட்டி சுங்கச்சாவடி அலுவலகமானது குட்டையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் பரிந்துரையின்படி நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும்படி திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டும் தற்போது வரையில் அகற்றப்படவில்லை.

ஆகவே, எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல், நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிா்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜி.பி.எஸ். கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT