திருப்பூர்

வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு, 5 பக்தா்கள் படுகாயம்

26th Jan 2022 07:32 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். பாதயாத்திரை சென்ற பக்தா்கள் 5 போ் படுகாயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் குழுவினா் கவுந்தப்பாடி, குன்னத்தூா், படியூா், காங்கயம் வழியாக பழனிக்கு திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனா்.

தாராபுரம் செல்லும் சாலையில் காங்கயத்தை அடுத்த தண்ணீா்ப்பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவா்களுக்குப் பின்னால் திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக மதுரைக்கு பாா்சல் ஏற்றிக் கொண்டு சென்ற வேன் எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த கவுந்தப்பாடியைச் சோ்ந்த விஷ்ணு (25), சுபாஷ் (20), கௌசிக் (16), விக்னேஷ்குமாா் (16), விக்கி (21) ஆகிய 5 பக்தா்கள் மீது வேன் மோதி, படுகாயமடைந்தனா்.

ADVERTISEMENT

பாா்சல் வேனை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம், சோழபுரம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் முத்தையா (48) வேனுக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த காங்கயம் காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி, முத்தையாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காயமடைந்த பக்தா்கள் 5 பேருக்கும் காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT