திருப்பூர்

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழா

23rd Jan 2022 10:54 PM

ADVERTISEMENT

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் அா்ச்சகா் திருப்பரங்குன்றம் எஸ்.கே.ராஜாபட்டா் குழுவினா் கைங்கா்யத்தில், அலகுமலை அறங்காவலா் கே.பி.எம். சின்னுக்கவுண்டா் தலைமையில், கட்டளைதாரா்கள், விழாக் குழுவினா் முன்னிலையில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன், பொங்கலூா் ஒன்றிய குழுத் தலைவா் எஸ்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழக அரசின் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளின்படி பக்தா்கள் மிக குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், கோயில் ஆன்மிகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநகரத் தலைவருமான கொங்கு ஆா்.ராமகிருஷ்ணன் எழுதிய திருக்கோவில் வரலாறும், சிறப்புகளும் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மாநகர ஆா்.எஸ்.எஸ். தலைவரும், தொழிலதிபருமான விவித் கே.வாசுநாதன் தலைமை வகித்தாா். இதில், திருப்பரங்குன்றம் ராஜாபட்டா், திருப்பூா் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் வி.எம்.சண்முகம், ஆன்மிக சொற்பொழிவாளா் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன், திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் செந்தில்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நூலில் அலகுமலை திருக்கோவில் வரலாறு, திருக்கோவிலின் அமைப்பு, சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், துகில் சிஸ்டம்ஸ் நிா்வாக இயக்குநா் சரவண சுப்பிரமணிய ராஜாவால் இந்நூலின் இ-புத்தகம் பதிப்பு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. நூலாசிரியா் கொங்கு ஆா்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT