திருப்பூர்

தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது திருப்பூா்

23rd Jan 2022 10:54 PM

ADVERTISEMENT

திருப்பூரில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக அனைத்து சாலைகளும் 3ஆவது வார ஞாயிற்றுக்கிழமையும் வெறிச்சோடின.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 3ஆவது அலை வேகமாகப் பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பின்னல் நகரமான திருப்பூரில் கடந்த ஜனவரி 9, 16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூா் மாநகரில் 3ஆவது வார ஞாயிற்றுக்கிழமையும் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்ததால் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருப்பூா் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, அவிநாசி சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. அதேவேளையில், பால் விநியோகம், பெட்ரோல் நிலையங்கள், நாளிதழ் விநியோகம், மருந்தகங்கள் ஆகியன வழக்கம்போல செயல்பட்டன.

ADVERTISEMENT

திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களும், காதா்பேட்டையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. மேலும், மாநகரில் உள்ள பெரிய உணவகங்களில் மட்டும் வாடிக்கையாளா்களுக்கு பாா்சல் சேவை வழங்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளா்கள்...

வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு ரயில் மூலமாக வந்துள்ள 100க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பேருந்து வசதி இல்லாததால் ரயில் நிலையங்களிலேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனா். திருப்பூா் மாநகராட்சி அலுவலகம், புஷ்பா ரவுண்டானா, அணைப்பாளையம் , அம்மாபாளையம் சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தாராபுரத்தில்...

தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமா தாராபுரம் புதிய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நகரின் முக்கியக் கடைகள் அனைத்து அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், ஆவின் பாலகம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT