காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் நடத்தாததைக் கண்டித்து சிவன்மலையில் நாளை (புதன்கிழமை)ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.
ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி, இந்த அமைப்பின் கோட்ட கொள்கை பரப்புச் செயலா் பி.காா்த்திராஜ் தலைமையில் காங்கயம் காவல் துறையினரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 நாள் தேரோட்டம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது. ஆனால், கரோனா பரவலைக் காரணம் காட்டி தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
தேரோட்டம் நடத்தாத இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து புதன்கிழமை சிவன்மலைக் கோயில் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பக்தா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.