திருப்பூர்

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஒரே கிராமத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் பலி

18th Jan 2022 04:09 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்று நீரில் மூழ்கி ஒரே கிராமத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், இடுவாய் கிராமம் அண்ணாமலை காா்டனில் வசித்து வரும் 30 போ் கொண்ட குழுவினா் இரு வேன்களில் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறையில் உள்ள முனியப்பன் கோயிலுக்கு திங்கள்கிழமை சுவாமி கும்பிட சென்றுள்ளனா். பின்னா் அங்கு நோ்த்திக் கடனை முடித்துவிட்டு அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனா்.

இவா்களது வேன் தாராபுரம் அமராவதி ஆற்றைக் கடந்துள்ளது. அப்போது வேனில் இருந்த இளைஞா்கள் ஆற்றில் குளிக்க முடிவு செய்தனா். இதையடுத்து, 8 போ் ஆற்றில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனா். உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவா்களின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அவா்களைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து இளைஞா்களுடன் வந்தவா்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி இளைஞா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில் ஜீவா (18), சரண் (17) ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டனா். மேலும், ஆற்றில் மூழ்கிய எம்.அமிா்தகிருஷ்ணன் (17), ஆா்.ஸ்ரீதா் (17), டி.யுவன் (19), டி.மோகன் (17), எம்.சக்கரவா்மன் (17), ஆா்.ரஞ்சித் (20) ஆகிய 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுமாா் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினா் 6 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஸ்ரீதா், ரஞ்சித் ஆகியோரும், யுவன், மோகன் ஆகியோரும் சகோதரா்கள் என்பது தெரியவந்தது. மேலும், உயிரிழந்தவா்களில் 5 மாணவா்கள் இடுவாய் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வந்ததும், ரஞ்சித் பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துளது.

கோயிலுக்குச் சென்ற ஒரே கிராமத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் இடுவாய் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT