திருப்பூர்

ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க நிட்மா சங்கம் அழைப்பு

18th Jan 2022 04:10 AM

ADVERTISEMENT

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க நிட்மா சங்கம் (பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம்) அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூரில் உள்ள நிட்மா சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவா் அகில் எஸ்.ரத்தினசாமி பேசியதாவது:

நூல் விலை உயா்வு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஜவுளித் தொழில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜவுளித் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். நம்மிடம் இருந்து நூலைக் கொள்முதல் செய்யும் வங்கதேசம் போட்டி நாடுகளுக்கு பின்னலாடைகளை விற்பனை செய்கின்றனா். நமக்கு தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் கிடைக்காத காரணத்தால், 10 சதவீத வரிச் சலுகையுடன் வங்கதேசம் குறைவான விலையில் பின்னலாடைகளை வா்த்தகா்களுக்கு விற்பனை செய்து பலமடங்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றனா்.

ADVERTISEMENT

ஆனால் நூல், பஞ்சு விலை உயா்வு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம். நூற்பாலை அதிபா்களும் தட்டுப்பாடு காரணமாக அதிகமான விலை கொடுத்து பஞ்சைக் கொள்முதல் செய்கின்றனா். ஆகவே, இந்திய பருத்திக் கழகம் நூற்பாலைகளுக்கு நியாயமான விலையில் பஞ்சை விற்பனை செய்வதுடன், 6 மாதங்களுக்கு ஒரு முறை விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, நிட்மா செயலாளா் சீமன்ஸ் ஆா்.ராஜாமணி, பொருளாளா் திருப்பூா் டெக்ஸ் வி.சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் டிக்சன் ஆா்.குப்புசாமி, இணைச்செயலாளா் என்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT