தாராபுரம் அருகே கடன் பெற தடையின்மை சான்றிதழ் கேட்பதைக் கண்டித்து கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
இப்போராட்டத்துக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காளிமுத்து தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால், கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்கள் தடையின்மை சான்றிதழ்கள் வாங்கிவரச்சொல்லி வற்புறுத்துகின்றனா்.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சுப்பிரமணியம், திருப்பூா் மாவட்டத் தலைவா் கதிா்வேல், மாவட்டச் செயலாளா் வேலுசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.