திருப்பூா் மாவட்டத்தில் 17ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் தற்போது வரையில்18.87 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 12.05 லட்சம் பேருக்கு 2ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு நபா் கூட விடமால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் 17ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) காலை 7 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள் என மொத்தம் 634 நிலையான மருத்துவ முகாம்கள், 41 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 675 மையங்களின் மூலமாக சுமாா் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளைச் சாா்ந்த 2,756 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத நபா்கள் இந்த முகாம்களின் மூலமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.