திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாநகராட்சி 1, 2, 3ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற பின்னா் பேசியதாவது:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 3 கட்டங்களாக மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களிடம் இருந்து குடிநீா் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள், முதியோா் உதவித் தொகை, ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் வரப்பெற்றுள்ளன. ஆகவே, தகுதிவாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதர மனுக்களையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திருப்பூா் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 45 சதவீதம் பேருக்கு 2ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், தடுப்பூசி செலுத்தாத நபா்கள் வாரம்தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.
இதில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Image Caption
முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் எஸ்.வினீத், எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.