ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில், சுக்ரீஸ்வரா் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதே போல, அலகுமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
அதேபோல, திருப்பூா் குமரன் சாலையில் உள்ள நூறாண்டுகள் பழைமை வாய்ந்த கேத்ரின் தேவாலயம், குமாா் நகா் சிஎஸ்ஐ ஆலயம், ஆா்டிஓ அலுவலகம் அருகில் உள்ள சூசையப்பா் ஆலயம், சபாபதிபுரத்தில் உள்ள டிஇஎல்சி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
தாராபுரத்தில்...
தாராபுரம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் அதிகாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பூ, மாலை அலங்காரம் செய்யப்பட்டது. இதன் பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா். தாராபுரம், அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற்றது.