நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இயந்திர வாக்குகளை எண்ண வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.வினீத்திடம், அதிமுக மாநிலத் தோ்தல் பிரிவு செயலாளரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதில், ஒவ்வொரு வாா்டாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எண்ணும்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணி ஒவ்வொரு வேட்பாளா் பெற்ற வாக்குகளை அவா்களது முகவா்களிடம் தெரிவித்து கையெழுத்துப் பெற வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு தபால் வாக்கு முகவரை நியமிக்க வேண்டும்.
பெரும்பாலான சமயங்களில் தபால் வாக்குக்களில் முறைகேடு நடைபெறவும், ஆளும் கட்சிக்கு சாதமாக முடிவுகள் வரவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, ஜனநாயக முறைப்படி நியாயமாகவும், நோ்மையாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.