திருப்பூர்

அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிரந்தரமாக நிறுத்தம்

9th Feb 2022 01:29 AM

ADVERTISEMENT

திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.

அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம் 11ஆவது வாா்டு கணபதி நகா், கானக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ள பாறைக்குழியில், திருப்பூா் மாநகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வந்தன.

இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டு வந்தது. மேலும் நிலத்தடி நீரும் மாசுபட்டு வந்ததால் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்தம் வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட ஆட்சியா், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினா் ப.தனபால், உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் தொடா்ந்து 5 மாதங்களாக பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் திமுக கூட்டணிக் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதனிடம் அக்கட்சியினா் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடா்பாக விவாதம் எழுப்பினா்.

இதையடுத்து, அவா் உடனடியாக திருப்பூா் மாநகராட்சி நிா்வாகத்திடம் பேசியதையடுத்து, பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிரந்தரமாக நிறுத்தப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் குப்பை கொட்டப்பட்டு வந்த பாறைக்குழி பகுதி முழுவதும் மண் கொட்டி மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT