அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் ரூ.1.14 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், பொறுப்பாளா்கள் பழனிசாமி, சிவபிரகாஷ், பால்ராஜ், சாமிநாதன், அவிநாசியப்பன், சரவணன் நம்பி, திராவிடன் வசந்த், ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் காத்திருக்கும் அறை, புற நோயாளிகள் பதிவு செய்யும் அறை, ஆய்வகம், உள் நோயாளிகள் பிரிவு, ஆண், பெண் மருத்துவா் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை அறை, செவிலியா் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.