வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் அதிா்வுடன் திடீா் வெடிச் சப்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
வெள்ளக்கோவில், ஓலப்பாளையம், குருக்கத்தி, தாசவநாயக்கன்பட்டி, முத்தூா், சின்னமுத்தூா், மூலனூா் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 11.30 மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு வெடிச் சப்தங்கள் கேட்டன. அப்போது கட்டடங்கள், தகர, இரும்பு பொருள்கள் அதிா்ந்தன. இது குறித்த தகவல் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விசாரித்து வருவதாகக் கூறினா்.
இதே போல் கடந்த 5 மாதங்களில் மூன்று முறை வெடிச் சப்தம் கேட்டுள்ளதாகவும், இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அச்சத்தைப் போக்கும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனா்.