திருப்பூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக நிகழாண்டில் விவசாயிகளுக்கு ரூ.435.50 கோடி பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளன என திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் எஸ்.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உரிய தவணைத் தேதியில் பயிா்க் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் வட்டியை செலுத்தத் தேவையில்லை. திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு 37,291 விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ.408.10 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 3,878 பேருக்கு ரூ.27.20 கோடி என மொத்தம் 41,097 விவசாயிகளுக்கு ரூ.435.50 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கே.சி.சி. திட்டத்தின்கீழ் ஒரு விவசாயிக்கு ஜாமின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், பிணையத்தின் பேரில் ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புக் கடனாக கறவை மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களுக்கான வட்டியை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்தி வருவது வட்டியில்லா பயிா்க் கடன் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினா் சோ்க்கையுடன், பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, விளைபொருள்கள் கடன் என அனைத்து வகையான கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், நில உடைமை தொடா்பான கணினி சிட்டா, பயிா் சாகுபடி தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் அடங்கல் சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடா்பு கொண்டு உரிய மனுவை சமா்ப்பித்து பயிா்க் கடன் மற்றும் இதர கடன்களைப் பெறலாம்.
அதே வேளையில், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா் படிவத்தைப் பெற்று ரூ.100 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.10 என மொத்தம் ரூ.110 ஐ செலுத்தி உறுப்பினராக சோ்ந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.