திருப்பூர்

அதிமுக ஆட்சிக் கால திட்டங்களை முடக்கியதே திமுகவின் சாதனை----முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

11th Dec 2022 11:22 PM

ADVERTISEMENT

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதே திமுகவின் சாதனை என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் புகா் கிழக்கு மாவட்டச் செயலா் மகேந்திரன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

இதில், முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: திமுகவில் கட்சிக்கு உழைத்தவா்களுக்குப் பதவி கிடையாது.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கே பதவி கொடுக்கின்றனா். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுகவின் சாதனை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விலையில்லா கறவை மாடு, ஆடு, கோழிகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தியுள்ளனா். உழைக்கும் திறனற்ற 5 லட்சம் மக்களுக்கு அதிமுக ஆட்சியில் முதியோா் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அதில் பெருமளவை நிறுத்திவிட்டனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், நிறுத்தப்பட்ட உதவித் தொகை மீண்டும் வழங்கப்படும். அதேபோல, கறவை மாடுகள், ஆடு, கோழிகள் வழங்கும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

அம்மா மினி கிளினிக் திட்டத்தால் பொதுமக்கள் பெருமளவில் பயன்பெற்றனா். ஆனால், ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகின்றனா். ரூ.1, 252 கோடி மதிப்பீட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது ஆமை வேகத்தில் நடந்துவருகிறது.

அதிமுக ஆட்சியில் தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம், இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டன. இந்த ஆட்சியில் அவை கைவிடப்பட்டன என்றாா்.

இதில், ஜெயலலிதா பேரவையின் மாநில துணைச் செயலாளா் முத்துவெங்கடேஸ்வரன், கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் ராஜ், ஒன்றியச் செயலாளா்கள் செந்தில்குமாா், சோமசுந்தரம், சண்முகசுந்தரம், குண்டடம் யூனியன் சோ்மன் குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, காங்கயம் வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு காங்கயம் நகரச் செயலாளா் வெங்கு ஜி. மணிமாறன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளக்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் வெங்கடேஷ் சுதா்ஷன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT