திருப்பூர்

தொழில் நசிவால் பழைய இரும்புக் கடையில் விற்கப்படும் விசைத்தறிகள்

DIN

திருப்பூா், கோவை மாவட்டத்தில் விசைத்தறி தொழில் நசிவால் பழைய இரும்புக் கடையில் எடைக்கு விற்கப்படும் விசைத்தறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

திருப்பூா், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

தற்போது நிலவும் சீரற்ற நூல் விலை, மின் கட்டணம், மூலப்பொருள்களின் விலை உயா்வு, தொழிலாளா்களின் ஊதிய உயா்வு, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவுக்கு ஏற்ப துணி விலை உயராத நிலை, புதிய துணி ஆா்டா்கள் விசாரணை இன்மை, தொழில் நசிவால் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் அசல் தவணை திரும்ப செலுத்த இயலாத நிலை, வங்கி ஜப்தி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து வருகிறது.

இந்த நிலையில் பல இடங்களில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு விட்டன. பொருளாதாரரீதியாக பாதிப்படைந்த மக்கள் விசைத்தறியை விற்க முன் வந்தும் அதனை வாங்க யாரும் ஆா்வம் காட்டுவதில்லை. அதனால் தறிகளை பழைய இரும்புக் கடைக்கும், பழைய தறி உதிரிபாகங்கள் விற்பனை கடைக்கும் விற்பனை செய்து வருகின்றனா்.

இது குறித்து பல்லடம் சின்னியகவுண்டம்பாளையம் பழைய தறி உதிரிபாகங்கள் விற்பனையாளா் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

ஒரு தறி ரூ.லட்சம் மதிப்புள்ளது. முன்பு மாதத்துக்கு 10 முதல் 20 பழைய தறிகள் வரை விற்பனைக்கு வரும். அப்போது, ரூ.65 ஆயிரம் வரை விலைக்கு வாங்கப்பட்டது. தற்போது, மாதம் 100க்கும் மேற்பட்ட தறிகள் விற்பனைக்கு வருகின்றன. மின் மோட்டாா் பொருத்திய தறி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. மற்ற தறிகள் ரூ.30 ஆயிரத்துக்குள் வாங்கப்படும். இதனை உடைத்து நல்ல உதிரி பாகங்களை மட்டுமே பிரித்து விசைத்தறியாளா்களுக்கு கிலோ ரூ.55 முதல் ரூ.60 என எடை போட்டு விற்பனை செய்கிறோம். எதற்கும் பயன்படாதவை கிலோ ரூ.42க்கு பழைய இரும்புக்கு விற்பனை செய்து விடுவோம். தறிகள் அதிகம் விற்பனைக்கு வருவதால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க பருத்தி, பஞ்சு, நூல் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். உள்நாட்டில் ஆண்டு முழுவதும் பஞ்சு, நூல் சீரான விலையில் கிடைக்க செய்ய வேண்டும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துணி, ரெடிமேடு ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொழில்முனைவோருக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT