திருப்பூர்

காங்கயம் அருகே காா் மீது லாரி மோதல்:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே காா் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளக்காட்டுப்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (35). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இவா் காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் விஸ்வநாதன், அவரது மாமியாா் மணி (55), மணியின் உறவினா் ரமணன் (37), அவரது மனைவி உமாவதி (33) ஆகியோா் சென்னிமலை பகுதியில் நடைபெற்ற விசேஷத்துக்கு செல்ல காங்கயம்-சென்னிமலை சாலை வழியாக காரில் திங்கள்கிழமை சென்றுள்ளனா். காரை விஸ்வநாதன் ஓட்டிச் சென்றாா்.

காங்கயம்-சென்னிமலை சாலை, திட்டுப்பாறை அருகே பாரவலசு பகுதியில் காா் சென்றபோது, எதிரே சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரி, இவா்களது காா் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில் விஸ்வநாதன் மற்றும் மணி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரமணன், அவரது மனைவி உமாவதி ஆகியோரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக 2 பேரும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணன் உயிரிழந்தாா். படுகாயமடைந்த உமாவதிக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT