திருப்பூர்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் நாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் யோ.ராஜேஷ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு 1,761 சிறப்புப் பயிற்றுநா்களும், 413 இயன்முறை மருத்துவா்களும் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பணியாளா்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக ஊதியத்தை உயா்த்தவில்லை. அதே வேளையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் இதர அனைத்து நிலை பணியாளா்களுக்கும் திமுக ஆட்சியில் 15 சதவீத ஊதிய உயா்வும், போக்குவரத்துப் படியாக மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, சிறப்புப் பயிற்றுநா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தை வரும் டிசம்பா் 12ஆம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு அருகில் மின் மயானம் அமைக்க எதிா்ப்பு...

ADVERTISEMENT

பெருமாநல்லூரைச் சோ்ந்த பாஜக நிா்வாக பா.குமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அவிநாசி வட்டம் பெருமாநல்லூா் ஊராட்சி பாலசமுத்திரம் அருகில் மின்மயானம் கட்ட ஊராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. மின் மயானம் கட்டப்படவுள்ள இடத்துக்கு அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். மேலும், மின் மயானத்துக்கு அருகில் நீா்வழிப்பாதையும், தடுப்பணையும் உள்ளன.

ஆகவே, பொதுமக்களுக்கும், பள்ளி மாணவா்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ள மின் மயானத்தை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்...

சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்புத் தலைவா் ஆ.அண்ணாதுரை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் காவல் நிலைய எல்லை மிகவும் பெரியதாக உள்ளது. கோவை மாவட்ட எல்லையான காரணம்பேட்டையில் இருந்து திருப்பூா் நொச்சிபாளையம் பிரிவு வரை சுமாா் 50 கி.மீ. சுற்றளவு உள்ளது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதியாக உள்ளதால் பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இதனால் சட்டம்-ஒழங்கு பாதிக்கப்படுவதுடன், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. திருட்டு, கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, அருள்புரம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ்...

தமிழ்நாடு ஹெச்எம்எஸ் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளா் பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், மாவட்டச் செயலாளா் ஆா்.முத்துசாமி ஆகியோா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கட்டுமானம் மற்றம் உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு தனித்தனியாக 17 நலவாரியங்கள் உள்ளன. இந்த நலவாரியங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பொங்கல் போனஸ் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தொழிலாளா்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த திட்டத்தில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். தொழிலாளா் பதிவு தொடா்பாக மாவட்டம்தோறும் ஒரே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் வழங்குவதைப்போல அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அனைத்து உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் முகாமில் 543 மனுக்கள் பெறப்பட்டன: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீா் வசதி, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 543 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது மனுதாரா்கள் முன்னிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT