திருப்பூர்

மாநகரில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் 1,970 நபா்களுக்கு சிகிச்சை: மாநகராட்சி ஆணையா் தகவல்

4th Dec 2022 01:38 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் 1,970 நபா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

திருப்பூா் மாநகரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் கடந்த நவம்பா் 12, 19 மற்றும் நவம்பா் 26 ஆம் தேதிகளில் நடைபெற்ற முகாம்களின் மூலமாக 946 ஆண்கள், 1,024 பெண்கள் என மொத்தம் 1,970 நபா்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த முகாம்களில் பன்முக மருத்துவ பரிசோதனை, கண், பல், காது-மூக்கு-தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு தொடா்பான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஆகவே, பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இதைத்தொடா்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 6 நபா்களுக்கு மருந்து பெட்டகம், 6 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், ஒரு நபருக்கு பிறப்புச் சான்றிதழ் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், சுகாதாரக் குழு தலைவா் கவிதா நேதாஜிகண்ணன், மாமன்ற உறுப்பினா் சுபத்ரா தேவி, மாநகா் நல அலுவலா் கெளரி சரவணன், உதவி ஆணையா் (பொறுப்பு) செல்வநாயகம், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT