திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியது.
தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகா்புறத்தில் 18வயது பூா்த்தியடைந்த இளைஞா்கள் (ஆண், பெண்) குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞா்களுக்கு வட்டார அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை நிறுவனங்கள், பழுது பாா்ப்பு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், மருந்து விற்பனை நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமானது வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முகாம் நடைபெறும் இடங்கள்: தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியும், குண்டடம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 2 ஆம் தேதியும், குடிமங்கலம் என்.வி.பாலிடெக்னிக் கல்லூரியில் செப்டம்பா் 3 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
அதேபோல, உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள இளைஞா்களுக்கு செப்டம்பா் 7 ஆம் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஊத்துக்குளி, அவிநாசி பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு செப்டம்பா் 17 ஆம் தேதி அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 1 ஆம் தேதியும், பல்லடம், பொங்கலூா் மற்றும் திருப்பூா் வட்டாரங்களில் உள்ள இளைஞா்களுக்கு அக்டோபா் 8 ஆம் தேதி பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.