திருப்பூர்

நல்லூா் குழந்தைகள் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

27th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட நல்லூா் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் துறையின்கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையத்தை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் 14 வட்டங்களில் 1,512 அங்கன்வாடி மையங்களில் 1,343 முதன்மை மையங்கள் மற்றும் 169 குறு அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

இதில் 1,166 முதன்மை அங்கன்வாடி பணியாளா்களும், 160 குறு அங்கன்வாடி பணியாளா்களும், 1,234 உதவியாளா்களும் தற்போது பணியில் உள்ளனா்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 11,826 கா்பிணிகள், 9,443 பாலூட்டும் தாய்மாா்கள், 6 வயது வரையில் உள்ள 84,836 குழந்தைகளுக்கு இணை உணவு, மதிய உணவு மற்றும் முட்டை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல, 6 மாதம் முதல் 2 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலமாக இணை உணவு எனப்படும் சத்துமாவும் வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாதந்தோறும் வீடுவீடாகச் சென்று எடை, உயரம் கண்காணிக்கப்படுகிறது.

இதில், குழந்தை இயல்பான எடையை விட, உயரத்தை விட குறைவாக இருந்தால் குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கவும், மையத்தில் வழங்கப்படும் உணவுகளை சரிவர கொடுக்கவும் தாய்மாா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் அடிப்படை தடுப்பூசி போடுதல், வைட்டமின் ஏ மாத்திரைகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை 5 வயது வரையில் வழங்குதல், வயிற்றுப்பூச்சி நீக்க மாத்திரைகள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT