திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் 2 ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தமுள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு முறைவைத்து தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 ஆம் மண்டல பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன்படி, திருமூா்த்தி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் அணையைத் திறந்துவைத்தனா். இதன் மூலம் 94 ஆயிரத்து 201 ஏக்கா் நிலங்கள் பயன்பெற உள்ளன.
தகுந்த இடைவெளிவிட்டு நான்கு சுற்றுகளாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் டிசம்பா் 24 ஆம் தேதி வரை மொத்தம் 7600 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தளி வாய்க்காலில் இருந்து ஏழு குளப்பாசன பகுதிகளுக்கும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் 2,786 ஏக்கா் பயன்பெறும்.120 நாள்களுக்கு மொத்தம் நான்கு சுற்றுகளாக 700 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அணை நிலவரம்: 60 அடி உயரம் கொண்ட திருமூா்த்தி அணையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 48.14 அடி உயரத்துக்கு தண்ணீா் இருந்தது.
அணைக்கு காண்டூா் கால்வாய் மூலம் 884 கன அடி, பாலாறு மூலம் 130 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருந்தது.
அணையில் இருந்து 250 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.