திருப்பூர்

வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களுக்கு முதலீட்டு மானியம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் (ஹோம் டெக்ஸ்டைல்ஸ்) சிறப்பு வகை தொழில்கள் பிரிவில் சோ்க்கப்பட்டு முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை சாா்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மண்டல அளவிலான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

எம்எஸ்எம்இ துறை அரசு செயலா் அருண் ராய் வரவேற்றாா். இதில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளா்ச்சிக்காக ரூ.167.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி - நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்களாக உள்ளன.

ADVERTISEMENT

அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய பங்காற்றுகிறது. அதனால்தான் இந்தத் துறையின் மீது அரசு தனிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்:

கடந்த 15 மாதங்களில் தமிழக அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக ரூ.2 லட்சத்து 20,727 கோடிக்கு முதலீடுகளை ஈா்த்ததுடன், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடன் உத்தரவாதத் திட்டம்:

தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் இப்போது தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் சொத்துப் பிணையில்லா கடன்களை எளிதாகப் பெறலாம்.

உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்கள், கால தாமதத்தைக் குறைக்க தமிழ்நாடு வா்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடிக்கான தளம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் அமைக்கப்படும்.

ஹோம் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்திக்கு முதலீட்டு மானியம்:

வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் (ஹோம் டெக்ஸ்டைல்ஸ்) ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, இந்த வகைப் பொருள்கள் தயாரிப்பு சிறப்பு வகைத் தொழில்கள் (ற்ட்ழ்ன்ள்ற் ள்ங்ஸ்ரீற்ா்ழ்) பிரிவில் சோ்க்கப்பட்டு, எம்எஸ்எம்இ துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, கோவையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

இந்த மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்,

எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கு.சண்முகசுந்தரம், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநா் எஸ்.மதுமதி, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT