திருப்பூர்

காணாமல் போன 108 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

17th Aug 2022 10:38 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாநகரில் கடந்த 4 மாதங்களில் திருடப்பட்ட, காணாமல் போன ரூ.16.5 லட்சம் மதிப்பிலான 108 கைப்பேசிகள் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரில் திருடப்பட்ட, காணாமல் போன கைப்பேசிகளைக் கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாா்களின்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் சொா்ணவள்ளி, உதவி ஆய்வாளா் சையத் ரபீக் சிக்கந்தா் மற்றும் காவலா்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப் படையினா் நவீனதொழில் நுட்பங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், கைப்பேசிகளை வாங்கி தற்போது பயன்படுத்தி வருபவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவா்களிடமிருந்து 108 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகன் உத்தரவின்பேரில் இந்த கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த 108 கைப்பேசிகளின் மதிப்பு ரூ.16.5 லட்சமாகும். காணாமல் போன கைப்பேசிகளை மீட்ட சைபா் கிரைம் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா் அபினவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT