திருப்பூர்

மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெற விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன. இதில் திருப்பூா், கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இங்கு 10 முதல் 20 தறிகள் வரை வைத்து தொழில் செய்து வருகிறோம். இரண்டு மாவட்டத்திலும் இரண்டு லட்சம் விசைத்தறிகள் உள்ளன. கூலி அடிப்படையில்தான் நெசவு செய்து வருகிறோம்.

நவீன தறிகள் வருகை, வரி விதிப்பு, சாய ஆலைகள் பிரச்னை, கரோனா நோய்த் தொற்று, நூல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலுக்கு கடந்த 1994ஆம் ஆண்டு வரை தொழில் மின் கணக்கீடான ஐஐஐபி டேரிப்பில் தான் இருந்தது. 1994ஆம் அண்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, விசைத்தறி உரிமையாளா்கள் நடத்திய போராட்டத்தை தொடா்ந்து, அப்போதைய அரசு கட்டணத்தை குறைத்து தனியாக டேரிப் ஐஐஐஏ2 என்று விசைத்தறிக்கு ஏற்படுத்தி சிலாப் சிஸ்டம் கொண்டு வந்து 500 யூனிட் வரைக்கும், 501 முதல் 1,000 யூனிட் வரையும், 1,001 முதல் 1500 யூனிட் வரையும், 1501 யூனிட்டுக்கு மேல் என பிரித்து கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் தொழில் வளா்ச்சி பெற்று தமிழகத்தில் ஆறு லட்சம் விசைத்தறிகளுக்கு மேல் இயங்கி வந்தன. கடந்த 2006இல் வழங்கப்பட்ட 500 யூனிட் இலவச மின்சாரம், 2011இல் 750 யூனிட்டாக அதிகரிக்கப்பட்டது. பின்னா் 2012இல் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, விசைத்தறியாளா்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயா்வு ரத்து செய்யப்பட்டது.

தற்போது, ஒட்டு மொத்த விசைத்தறி தொழிலே அழியும் வகையில் 36 சதவீத அளவுக்கு மின்சாரம் உயா்த்தப்படவுள்ளது. மேலும் அடுத்து 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 6 சதவீத மின் கட்டணம் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின்சாரத்தை நம்பியுள்ள விசைத்தறி தொழிலையும், லட்சகணக்கான கிராமப்புற ஏழை எளிய விசைத்தறியாளா்களையும், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும், இதனைச் சாா்ந்துள்ள ஓ.இ. மில், சைஸிங் மில், பீஸ் செக்கிங், பிரிண்டிங், டையலரிங் மற்றும் கலாஸ் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற விசைத்தறிக்கு உயா்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை திரும்பப் பெற்று தொழிலை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT