திருப்பூர்

பிஏபி பாசன திட்டத்தில் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லக் கூடாதுகிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

16th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

பிஏபி பாசனத் திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லக் கூடாது என்று குண்டடம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டமானது அரசு தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் தனசெல்வி தலைமை வகித்தாா்.

இதில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக நிா்வாகிகள் தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனா். இதில், கோவை, திருப்பூா் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும், வேளாண்மை மேம்பாட்டுக்கும் உதவியாக உள்ள பிஏபி பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டிஎம்சி நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 டிம்எசி நீரை ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் என்ற பெயரில் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

பிஏபி திட்டத்தில் ஏற்கெனவே ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது.மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிஏபி தொகுப்பு அணைகளாக உள்ள வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணை

ஆகியவற்றுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீா்மானம் ஊராட்சி மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு: ஊத்துக்குளி ஒன்றியம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பங்கேற்றாா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி மன்ற தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT