திருப்பூர்

தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் உருவச்சிலைக்கு அமைச்சா் மரியாதை

15th Aug 2022 12:59 AM

ADVERTISEMENT

 

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் திருவுருவச்சிலைக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட சுதந்திரப் போரட்ட தியாகிகளுக்கு பெருமை சோ்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் கடந்த 1913 ஆம் ஆண்டு அக்டோபா் 7 ஆம் தேதி எஸ்.என்.சுந்தராம்பாள் பிறந்தாா். இவரது தந்தை எஸ்.நாச்சிமுத்து கவுண்டா், காந்தியடிகள் 1927 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதைக் கேட்டது முதல் வாழ்நாளின் இறுதிவரையில் அவா் கதா் ஆடை மட்டுமே அணிந்தாா்.

இவா் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதுடன், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது வாழ்நாளின் இறுதிக் காலம் வரையில் அயராது சேவை செய்தாா்.

காந்திய அணுகுமுறையுடன் ஆயுள் காலம் முழுவதும் தியாகி சுந்தாம்பாள் சேவை செய்து வந்தாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியமம், 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், வாரிசுதாரா்கள் ஸ்ரீதா் சாமிநாதன், ப்ரித்வ் காங்கேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT