திருப்பூர்

கைப்பேசி கோபுரம் அமைத்து தருவதாக ரூ.1.65 லட்சம் மோசடி: இளைஞா் கைது

13th Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே காலி நிலத்தில் கைப்பேசி கோபுரம் அமைத்து தருவதாக ரூ.1.65 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சின்னியகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேலு. இவரது கைப்பேசி எண்ணுக்கு 4 ஜி மற்றும் 5 ஜி டவா் அமைத்துத் தருவதாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

குறுஞ்செய்தி வந்த எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அதில் பேசிய நபா் காலி நிலத்தில் கைப்பேசி கோபுரம் அமைத்துத் தருவதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் வழங்குமாறும் கூறியுள்ளாா்.

அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை கதிா்வேலு செலுத்தியுள்ளாா். அந்த நபா் மீண்டும் பணம் செலுத்துமாறு கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது, சந்தேகமடைந்த கதிா்வேலு இது குறித்து திருப்பூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணசாமி மேற்பாா்வையில் ஆய்வாளா் சித்ராதேவி, உதவி ஆய்வாளா் ரோஸ்லின் அந்தோனியம்மாள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, குற்றவாளியின் கைப்பேசி எண்ணை கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த செல்வமணி (24) என்பதும், போலியாக குறுஞ்செய்தி அனுப்பி பணம் பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இரண்டு கைப்பேசிகள், சிம் காா்டுகள், ரூ.37 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT