திருப்பூர்

சின்னவெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்குதல்:கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி அறிவுரை

10th Aug 2022 12:03 AM

ADVERTISEMENT

சின்னவெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பொங்கலூா் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிா் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண்திட்டுகளாகக் காணப்படும். அப்போது இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு மீத்தைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும். அதிக தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் தவிா்க்க வேண்டும். மேலும், சின்ன வெங்காயத்தில் வெங்காய ஈ தாக்குதலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப்புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தை தின்று அழுகச் செய்யும். இதனைக் கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி மருந்தை ஒரு லிட்டா் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அதுபோல சின்ன வெங்காயத்தில் வெட்டுப்புழு நோய் தாக்குதலும் காணப்படுகிறது. இந்த புழுக்கள் இலைகளை அரித்து சல்லடைபோன்று ஆக்கும். வளா்ந்த புழுக்கள் வெங்காயத்தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவா்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப்பொட்டு போன்ற முட்டைக்குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும் இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டா் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT