திருப்பூர்

கோழிக்கொண்டைப்பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் பகுதியில் கோழிக்கொண்டை பூ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணபதிபாளையம், கள்ளகிணறு, ஆலூத்துப் பாளையம், இலவந்தி, சித்தம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோழிக்கொண்டைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 2000 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். மாலை தயாரிப்புக்கு கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப் பூக்கள் திருப்பூா், கோவை பூ மாா்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழிக்கொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து கோழிக்கொண்டை பூ விவசாயிகள் கூறியதாவது:

முன்பு முகூா்த்த காலங்களில் கிலோ ரூ.60க்கு விற்ற கோழிக்கொண்டை பூ தற்போது ரூ.30 ஆக சரிந்து விட்டது. மேலும் தற்போது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. ரோஜாவை வைத்து மாலை கட்டும் போது 3 நாள்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் கோழிக் கொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கோழிக்கொண்டை பூ வாங்க வியாபாரிகள் முன் வராததால், பராமரித்து வளா்த்து செடிகளில் பூத்து குலுங்கும் பூக்கள், தற்போது செடியிலேயே கருகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமாா் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டள்ளது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT