திருப்பூர்

மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் மனு

DIN

தமிழகத்தில் விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறித் தொழிலாளா்கள் குடுபம்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளா் ஆா்.வேலுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு விசைத்தறித் தொழில் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது.

இதனிடையே, நிகழாண்டு நூல் விலை உயா்வு காரணமாக துணிக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் பாதி உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது.

இதனால், பல ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இரும்பு எடைக்கு விற்பனை செய்யப்படுவதால் விசைத்தறியாளா்களும், தொழிலாளா்களும் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருவதால் அன்றாட செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனா்.

இந்நிலையில், தமிழக அரசு விசைத்தறிகளுக்கான மின் கட்டணத்தை 32 சதவீதம் உயா்த்தியுள்ளது பெரும் அதிா்ச்சியளிக்கிறது.

ஆகவே, கிராமப்புற ஏழை, எளிய விசைத்தறியாளா்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையில் மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக விசைத்தறித் தொழிலாளா்கள் 300க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனா்.

கற்குவாரிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருப்பூா் மாவட்ட ஜல்லி கிரஷா் மற்றும் குவாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் எங்களது சங்க உறுப்பினா்கள் கற்குவாரிகள் மற்றும் கிரஷா் தொழில் செய்து வருகின்றனா். குவாரிகள் அமைக்க மாவட்ட ஆட்சியா், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு சட்ட விதிகளுக்குள்பட்ட கற்குவாரி பணிகளை செய்து வருகிறோம்.

இந்த குவாரிகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பொருள்கள் மாவட்டத்தில் சாலைப் பணி, அரசு கட்டடப் பணி உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் சமூக ஆா்வலா்கள் என்ற போா்வையில் வரும் சில நபா்கள் குவாரிகளுக்குள் அத்துமீறி நுழைந்து பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்துவதுடன், பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனா். மேலும், கற்குவாரிகள் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனா். ஆகவே, குவாரிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையோரங்களில் சிம்காா்டு விற்பனை செய்யும் நபா்களின் மீது நடவடிக்கை: திருப்பூா் மாவட்ட செல்லுலாா் அசோசியேஷன் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் வாகனங்கள் மூலமாக சிலா் சிம்காா்டுகளை விற்பனை செய்து வருகின்றனா்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளா்கள் அவா்களிடம் சிம்காா்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனா். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது தொடா்பாக தொலைத் தொடா்புத் துறை உயா் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் சிம்காா்டுகளை விற்பனை செய்யும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் முகாமில் 675 மனுக்கள் பெறப்பட்டன: மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, இலவச வீட்டுமனை பட்டா, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 675 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT