திருப்பூர்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

DIN

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

பழனியில் இருந்து தாராபுரம் வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அக்கட்சியினா் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் புகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் சி.மகேந்திரன் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி நீண்ட நாள்களுக்குத் தொடராது. அதிமுக ஆட்சி காலத்தில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டினோம்.

ஆனால் இன்று இவா்களால் ஒரு தடுப்பணை கூட கட்ட முடியவில்லை. விவசாயத்துக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கினோம்.

ஆனால், தற்போது எப்போது மின்சாரம் வரும் என்பது யாருக்குமே தெரியாது. பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவித்த பேருந்துகள் பழுதடைந்த நிலையில்தான் இயக்கப்பட்டன. இதில் பல பேருந்துகள் தற்போது இயங்குவது இல்லை.

அதிமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்களை உயா்த்தக் கூடாது என்று தீா்மானத்தை நிறைவேற்றினோம்.

திமுக ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் அனைத்து வரியினங்களும் உயா்த்தப்பட்டுள்ளன.

தோ்தல் வெற்றிக்காக திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றாா்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, தாராபுரம் நகரச் செயலாளா் காமராஜ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளா் சிவகுமாா், தாராபுரம் ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், பாலகுமாரன், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

காங்கயத்தில்...

காங்கயம் வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு புதிய பேருந்து நிலையம் முன்பு அதிமுக திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பலா் உயிரிழந்துள்ளனா்.இதை எடுத்துச் சொன்னால் ஆன்லைன் தடை செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிறாா்கள்.

சூதாட்டம் என்றாலே மோசமானது என்பது சாதாரண மக்களுக்கும் தெரியும். இது கூட தெரியாத முதல்வராக ஸ்டாலின் உள்ளாா். ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இதற்கு முதலமைச்சா் துணை போகிறாா்.

எந்தவொரு திட்டத்தை அறிவிப்பதாக இருந்தாலும் ஸ்டாலின் அரசு குழு அமைத்து விடுகிறது.கடந்த 14 மாத ஆட்சியில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் அதிகாரிகள் இருப்பது எதற்கு.தமிழகத்தில் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் காங்கயம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம், தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

அதிமுக ஆட்சியில் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. மொத்தத்தில் பொய்யை மூலதனமாக வைத்து ஆட்சி நடத்தும் ஒரே கட்சி திமுகதான் என்றாா்.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி, காங்கயம் ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் நகரச் செயலா் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பெருந்துறையில்...

பழனியில் இருந்து, சேலம் சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: மக்களை மறந்த ஆட்சி இந்த ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. திமுகவின் சொத்து பொய், திமுகவின் மூலதனம் பொய், திமுக அரசு மக்களின் விரோத அரசு.

அளித்த தோ்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த 14 மாதத்தில் நிறைவேற்றவில்லை. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

அதிமுக வழங்கி வந்த முதியோா் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபோதும், தமிழக அரசு குறைவிக்கவில்லை.

பெருந்துறை தொகுதி மக்களுக்கு கொடிவேரி கூட்டு குடிநீா்த் திட்டத்தை, அதிமுக அரசு கொண்டு வந்ததால், இப்பகுதி மக்கள் பயன்பெற்று வருகின்றனா்.

தற்போது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், தற்போது ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை மூன்று மாவட்ட மக்கள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு, முறையாக பாதுக்காகவில்லை. மக்களின் வரிப் பணம் வீணாகி வருகிறது. திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த நல்லத் திட்டங்களை முடக்கினாா்களே, அத்திட்டங்கள் அனைத்தும் அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்து புத்துயிா் பெறும் என்றாா்.

இதில், முன்னாள் அமைச்சா்கள் செங்கோட்டையன், கருப்பணன், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் பெருந்துறை ஜெயக்குமாா், பவானிசாகா் பன்னாரி, பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT