திருப்பூர்

பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயம் சமூக நீதிக்கு எதிரானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் டி.ராஜா

DIN

பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா தெரிவித்துள்ளாா்.

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) தொடங்கியது. இந்த மாநாட்டின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா கூறியதாவது:

கட்சியின் 24-ஆவது தேசிய மாநாடு ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வரும் அக்டோபா் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறோம்.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு:

பொருளாதாரம், அரசியல், சமூக தளங்களில் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளையே மத்திய பாஜக அரசு பின்பற்றி வருகிறது. பெரு (காா்ப்பரேட்) நிறுவனங்களுக்கு ஆதரவாகவே பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், உணவற்ற நிலையில் மக்கள் தவிக்கின்றனா். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவருகிறது. ஊடகங்கள் உள்பட மக்களின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது.

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு இல்லை: இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாா்மயமாக்குகிறது. அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அனைத்தையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்களில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியாா் துறையில் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று கூறுகிறோம்.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை:

விவசாயிகள் ஓராண்டு போராடி 700 போ் உயிரிழந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த சட்டங்களைத் திரும்பப்பெற்ற பின்னா் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிா் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவில்லை.

கல்வி உள்பட மாநில உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவருகிறது. கல்வியை தனியாா்மயமாகவும், வணிகமயமாகவும் தேசிய கல்விக் கொள்கை மாற்றுகிறது.

ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற முயற்சி:

இந்தியாவை ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருகிறது. நமது நாடு பல மொழிகளையும், பல பரிமாணங்களையும் கொண்டது. சமூக, மத நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் எல்லாம் தகா்க்கப்படுகின்றன.

அரசியல் சட்டம், ஜனநாயகம், பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக முறியடிக்கப்பட வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT