திருப்பூர்

பலத்த மழையால் கறிக்கோழி விற்பனை பாதிப்பு

6th Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

 

தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாததாலும் இறைச்சி நுகா்வு குறைந்துள்ளதாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகா்வை பொருத்து விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா்.

கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் அப்பகுதியில் கோழி இறைச்சி நுகா்வு 20 சதவீதம் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் பல்லடம் பகுதியில் உள்ள பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கறிக்கோழி நுகா்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் கேரளத்தில் சந்தைகளில் மீன் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கறிக்கோழி ஒரு கிலோ கொள்முதல் விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.66 ஆக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், கடும் விலை வீழ்ச்சியால் கோழிப் பண்ணையாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT